யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அருகில் உள்ள காவற்துறை நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் (HRCSL), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு
மனித எச்சங்கள் அகழ்வாராய்ச்சியின் நம்பகத்தன்மையை, உள்ளூர் காவற்துறையினரைக் கொண்டு உறுதிப்படுத்த முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா, பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூர் காவற்துறையினரை சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், அவர்களின் இருப்பு விசாரணையின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.
”இது போன்ற விடயங்களைக் கையாளும்போது, மக்களின் உணர்வுகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். ஆகவே, ஒரு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபோது, நாம் சரியான விடயத்தைச் சொன்னாலும் மக்கள் அதை ஏற்கத் தயாராக இருக்க மாட்டார்கள்,” என அவர் கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு, வெளிநாட்டு நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் தேவை என வலியுறுத்துவதுடன், வழக்கமான காவற்துறை ஊழியர்களின் பங்கேற்பு விசாரணையின் முடிவுக்கு பாதகமாக அமையலாம் எனவும் எச்சரித்துள்ளது.
காவற்துறையின் நிலைப்பாடு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, உள்ளூர் காவற்துறையினரின் நியமனத்தை நியாயப்படுத்தினார்.
”அதுதான் காவற்துறை செய்யும் முறை. அருகில் உள்ள நிலையங்களில் இருந்து அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும். இதற்கு வேறு மாற்று வழியில்லை. கொழும்பில் இருந்து காவற்துறை அதிகாரிகளை செம்மணிக்கு அனுப்ப முடியாதல்லவா?” என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இந்த அகழ்வாராய்ச்சி நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதாகவும், காவற்துறைக்கு இதில் தலையிட அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.